டெல்லியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக ஹனுமர் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இக்கோயிலை மீண்டும் கட்டித்தரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியை அழகுபடுத்தும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்காக அதன் முக்கியச் சாலையில் சுமார் 50 வருடங்களுக்கு முன் அமைந்த ஹனுமர் கோயில் தடையாக இருந்தது.
எனவே, வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 30, 2015இல் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோதமான சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட ஹனுமர் கோயிலை இடிக்க அனுமதி கோரப்பட்டது.
இதை எதிர்த்து மனோகர்மா சித்தாஸ்ரீ ஹனுமர் சேவா சமிதியால் கோயிலைக் காக்க வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உயர் நீதிமன்றம் விசாரித்தது. இதன் மீது கடந்த நவம்பர் 20, 2020இல் வெளியான தீர்ப்பில் ஹனுமர் கோயிலை இடிக்க அதன் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால், கடந்த ஜனவரி 3ஆம் தேதி வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனால் இடிக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லிவாசியான ஜிதேந்திரா சிங் உள்ளிட்ட நால்வரால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தம்மை ஹனுமரின் பக்தர்களாகக் குறிப்பிட்டவர்கள், இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் கட்ட அனுமதி வேண்டியுள்ளனர். இவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் கூறுகையில், ''கோயிலை இடிப்பதற்கு சட்டப்படியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இதன் மூலம், மனுதாரருக்கு உள்ள கோயிலை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கோயிலை இடிக்க உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவில் அது ஐம்பது வருடங்களுக்கு பழமையானது என்பதைக் கணக்கில் எடுக்கவில்லை. இந்தக் கோயிலை இடிக்காமலே டெல்லி அரசும், வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனும் அழகுபடுத்தும் பணியைத்தொடர்ந்திருக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோயில் இடிக்கப்பட்ட இரண்டு தினங்களுக்குப் பின் அதைக் கண்டித்து கடந்த 5ஆம் தேதி இந்துத்துவா அமைப்புகள் பெரும் போராட்டம் நடத்தினர். இதில், ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி அரசையும் கண்டித்திருந்தனர்.
இதற்கு அக்கட்சியினர், சாந்தினி சவுக் பகுதி வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிர்வாகம் பாஜகவிடம் உள்ளதாகவும், இக்கோயில் இடிக்கக் காரணம் பாஜகதான் என்றும் ஆம் ஆத்மி பதிலளித்து வருகிறது.