பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடும்படி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் பிறந்தநாள் ஜனவரி 15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு ஆண்டும் மாயாவதியின் பிறந்த நாளை ஜன்யங்கிரி தினம் (மக்கள் நல நாள்) என பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இம்முறை மாயாவதி தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“நாளை ஜனவரி 15, 2021 அன்று எனது 65 வது பிறந்த நாள் என்பதை அறிவீர்கள், நமது கட்சியின் தொண்டர்கள் இந்த நாளை முழுக்க முழுக்க எளிமையுடன் கொண்டாட வேண்டும், ஜன்யங்கிரி தின நிகழ்வுகளில் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் உதவியற்ற அனைத்து மக்களுக்கும் உதவுவதன் மூலம் எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 'என் போராட்டம் நிறைந்த வாழ்க்கைப்பயணம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இயக்கம்' என்ற புத்தகத்தின் 16 வது தொகுதி இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.
இவ்வாறு மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும், கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இந்த முறை கட்சி உறுப்பினர்கள் உதவிக்கரங்களை நீட்டி மக்களுக்கு தேவையான பொருட்களை அளித்து அதைக் கொண்டாடுவார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.