இந்தியா

பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கர்நாடகாவில் முதல் வழக்கு பதிவு: மாடுகளை ஏற்றி சென்ற வாகனம் பறிமுதல்

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் கடந்த மாதம் பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த சில தினங்களில் கர்நாடகாவில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தாவண்கெரே மாவட்டம் ராணி பெண்ணூரில் இருந்து சிக்கமகளூர் வழியாக மங்களூருவுக்கு 35 மாடுகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன. சிருங்கேரி அருகே வாகனம் சென்ற போது இந்துத்துவ அமைப்பினர் வாகனத்தின் ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிருங்கேரி போலீஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து சிக்கமகளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரீஷ் பாண்டே கூறுகையில், ``உரிய ஆவணங்கள் இன்றி மாடுகளை மங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக வாகனத்தின் ஓட்டுநர், உதவியாளர் உள்ளிட்டோர் மீது பசுவதை தடுப்பு சட்டம் 2020ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகனமும், மாடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. வாகனத்தின் உதவியாளர் மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை''என்றார்.

கர்நாடகாவில் ப‌சுவதை தடுப்பு சட்டம் 2020-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT