அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் நியமிக்க மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் கடந்த ஆண்டு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். தொடக் கத்தில் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை எதிர்த்து சமூக ஆர்வலர் வினீத் நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலை யில், அர்ச்சனா ராமசுந்தரத்தை தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தலைமை இயக்கு நராக மத்திய அரசு அண்மையில் இடமாற்றம் செய்தது.
இருப்பினும், அவர் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப் பட்ட நடவடிக்கையில் விதிகளை மத்திய அரசு பின்பற்றவில்லை எனக் கூறி வினீத் நாராயணன் தொடர்ந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
நீதிபதிகள் கேள்வி
வினீத் நாராயணன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் நீதிபதிகள், “இந்த வழக்கு தொடரப்பட்டதும், சிபிஐ கூடுதல் இயக்குநர் பணியை ஆற்ற வேண்டாம் என அர்ச்சனா ராமசுந்தரத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதே, அந்த உத்தரவு பொது நல வழக்கு மீதான தீர்ப்புக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டோம். ஒரு வேளை அந்த அதிகாரிக்கு சாதகமாக உத்தரவு வந்தால் மீண்டும் அவரை சிபிஐ கூடுதல் இயக்குநர் பொறுப்பில் மத்திய அரசு நியமிக்குமா?' என்று கேட்டனர்.
ஆனால், இக்கேள்விக்கு உடனடியாகப் பதில் தெரிவிக்க முடியாது என சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் கூறினார். இதை யடுத்து, இந்தக் கேள்விக்குரிய பதிலை மத்திய அரசிடம் இருந்து பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறினர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநர் பதவியில் எதிர்காலத்தில் நியமிக்கமாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.