பறவைக் காய்ச்சல், 2021 ஜனவரி 13-ம் தேதி நிலவரப்படி, 10 மாநிலங்களில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ஜார்கண்ட்டின் 4 மாவட்டங்களில் பறவைகள் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளன.
கால்நடை பராமரிப்பு துறைச் செயலாளர் தலைமையின் கீழ், 2021 ஜனவரி 12ம் தேதி, இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் 17 மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் மூலம், 2021 செயல் திட்டத்துடன், பறவைக் காய்ச்சல் பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலைமையைச் சமாளிக்க, சுகாதாரத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்களையும், கோழிப் பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பராமரிக்க வேண்டும் என மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பறவைக் காய்ச்சல் பாதிப்பை விரைவில் அடையாளம் காண, உயிரி பாதுகாப்பு-2 ஆய்வுகங்களை மாநில அளவில் அடையாளம் காண வேண்டும் எனவும், கட்டுப்பாடு நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டள்ளது.
பறவைக் காய்ச்சல், கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், கோழிப் பண்ணைகள் இடையே தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
பிற மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டைகள் விநியோகத்துக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இது கோழிப் பண்ணை தொழிலுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.