இந்தியா

உருமாறிய கரோனா தொற்று; இந்தியாவில் 102 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வகை கரோனா தொற்றால் இந்தியாவில் மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.14 லட்சமாக (2,14,507) சரிந்தது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 2.04 சதவீதமாகும். கடந்த 2020 ஜூன் 30-ம் தேதி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,15,125 ஆக இருந்தது. 197 நாட்களுக்குப் பிறகு தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கையில் 2,051 குறைந்துள்ளது.

நாள் ஒன்றில் ஏற்படும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,000-க்கும் குறைவான புதிய பாதிப்புகள் (15,968) நாட்டில் பதிவாகியுள்ளன. மறுபுறம் இதே காலகட்டத்தில் 17,817 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,01,29,111 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் வீதம் 95.51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிதாக குணமடைந்தவர்களில் 81.83 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4,270 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

74.82 சதவீத புதிய தொற்றுக்கள் 7 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன.

கோவிட்- 19 தடுப்பு மருந்து வழங்கும் பணி 2021 ஜனவரி 16-ம் தேதி தொடங்கவிருக்கிறது. மக்களின் பங்களிப்பு என்னும் கொள்கையின்‌அடிப்படையில், தேர்தல்கள் (வாக்குச்சாவடி வியூகம்), உலகளாவிய நோய் தடுப்புத் திட்டம் (யுஐபி) ஆகியவற்றின் அனுபவங்களைப் பயன்படுத்தி, தேசிய திட்டங்கள், ஆரம்ப மருத்துவ சுகாதாரம் போன்ற தற்போது நிலுவையில் உள்ள சுகாதார சேவைகளை விட்டுக் கொடுக்காது, அறிவியல் கட்டுப்பாட்டு வழிமுறைகள் இதர வழிகாட்டு நெறிமுறைகளை விட்டுக் கொடுக்காது, தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுமுகமான செயலாக்கத்தின் மூலம் நாடு முழுவதும் பிரமாண்டமான முறையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சுமார் 3 கோடி மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு முதலிலும், அவர்களைத் தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்டோர், 50 வயதிற்கு குறைவான இதர உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோரென 27 கோடி பேருக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கப்படும்.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் இந்தியாவில் மொத்தம் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT