குடும்ப வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சோம்நாத் பார்தி எம்எல்ஏவை ஒருநாள் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சோம்நாத் பார்தி. இவருக்கும் லிபிகா மித்ராவுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சோம்நாத் பார்தி தன்னை கொடுமைப்படுத்துவதாக கடந்த ஜூனில் டெல்லி துவாரகா போலீஸ் நிலையத்தில் லிபிகா புகார் அளித்தார்.
அதன்பேரில் குடும்ப வன்முறை, வரதட்சிணை கொடுமை, கொலைமுயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சோம்நாத் பார்தியை போலீஸார் கைது செய்து தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி மாஜிஸ்திரேட் சுதிர்குமார் முன்னிலையில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க டெல்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
சோம்நாத் பார்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு விசாரணை வருவதால் அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், சோம்நாத் பார்தியை ஒருநாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சோம்நாத் பார்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது லிபிகா மித்ராவும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.