உச்ச நீதிமன்றத்தில் காணொலி காட்சி (வீடியோ கான்பிரன்ஸ்) முறையை கைவிட்டு, வழக்கமான விசாரணை நடைமுறையை தொடங்கும் யோசனையை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே நிராகரித்துவிட்டார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உச்ச நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் காணொலிக் காட்சி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையால் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மா வாதிடும்போது, "காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடைபெறுவதால் நாடு முழுவதும் ஆயிரக் கணக்கான இளம் வழக்கறிஞர்கள் வருமானம் இழந்துள் ளனர்.
இதுபோல பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு அரசு ரூ.3 லட்சம் கடன் வழங்க வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளிக்க பார் கவுன்சில்கள் தயாராக இருக்கின்றன" என்றார்.
இதையடுத்து, மற்றொரு வழக்கறிஞர் ஆஜராகி, “கரோனா பரவல் ஓரளவு குறைந்துவிட்டதால் உச்ச நீதிமன்றம் காணொலி காட்சி முறையை கைவிட்டு வழக்கமான விசாரணை நடைமுறைக்கு திரும்ப வேண்டும்” என யோசனை தெரிவித்தார்.
வழக்கறிஞர்களின் வாதங் களைக் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக குறையவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் உச்ச நீதிமன்றம் திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் கூடுவார்கள். இதுவே வைரஸ் பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும். மக்களின் உயிரை பலிகொடுக்க உச்ச நீதிமன்றமே காரணமாகிவிடக் கூடாது. தற்போதைய சூழலை கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அத்துடன் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். நிலைமை சீரான பின்னரே உச்ச நீதிமன்றத்தில் பழையபடி விசாரணை நடைமுறைகள் தொடங்கும்.
வருமானம் இன்றி பாதிக்கப்பட்டிருக்கும் இளம் வழக்கிறிஞர்களுக்கு பார் கவுன்சில்கள்தான் முதலில் உதவி செய்ய வேண்டும். பின்னர்தான் அரசாங்கத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அவர்களுக்காக நிதி திரட்டுவது குறித்து பார் கவுன்சில்கள் முடிவு செய்ய வேண்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பாப்டே கூறினார்.