சீரம் மருந்து நிறுவனத்திடம் இருந்து ரூ.200 விலையில் கூடுதலாக 4.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சீரம் நிறுவனம் 1.10 கோடி டோஸ் கரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசுக்கு முதல் கட்டமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு நேற்று வழங்கியது.
இதையடுத்து, புனேவில் மஞ்சரி பகுதியில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதனவசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டன.
ஒவ்வொரு டிரக்கிலும் 478 பெட்டிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஒரு பெட்டியின் எடை 32 கிலோ என்று மருந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 4.5 கோடி டோஸ் மருந்துகளை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக வாங்கப்பட்ட 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளை மத்திய அரசுக்காக ரூ.200 விலையில், ஜிஎஸ்டி ரூ.10 சேர்த்து ரூ.210 விலையில் சீரம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தையும் பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைஃப்கேர் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.
முதல் கட்டமாக 1.10 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகள் ரூ.231 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வாங்கப்படும் 4.50 கோடி டோஸ் மருந்துகளையும் சேர்த்தால், ரூ.1,176 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வாங்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுமட்டுமல்லாமல், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் மருந்துகளும் 55 லட்சம் டோஸ்கள் வாங்க ஆர்டர் மத்திய அரசுத் தரப்பில் தரப்பட்டுள்ளன. இந்த 55 லட்சம் டோஸ் மருந்துகளும் ரூ.162 கோடிக்கு வாங்கப்பட உள்ளன.