இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டரில் திவீரவாதி சுட்டுக்கொலை: படையினர் 5 பேர் வீரமரணம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "இன்று (திங்கள்கிழமை) காலை குப்வாரா மாவட்டத்தின் இரண்டு இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்ற தீவிரவாதிகள் பதுங்கிடத்தை முற்றுகையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. தர்போராவில் நடந்த என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அதேவேளையில் ஹப்ருடா வனப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்தனர்" என்றார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சலீம் என்ற அடில் பதான், ரெஹ்மான் என்ற பூர்மி என அடையாளம் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT