மும்பையில் கடற்படை இளம் மாலுமி ஒருவர் குண்டடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இந்தியக் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் சவுத்ரி (வயது 22) சில நாட்கள் விடுப்புக்குப் பின்னர் கப்பல் பணிக்குத் திரும்பிய நிலையில் மர்மமான முறையில் புல்லட் காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''மும்பை கடலோரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியக் கடற்படை சேவையில் உள்ள ஐஎன்எஸ் பெத்வா ஏவுகணைப் போர்க்கப்பலில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது.
பெத்வா நதி என்று பெயரிடப்பட்டுள்ள இக்கப்பலில் 22 வயது கடற்படை மாலுமி ரமேஷ் சவுத்ரி குண்டடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கப்பல் தளத்தில் காணப்பட்ட உடல் அருகே மாலுமியின் சர்வீஸ் துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. ரமேஷின் மரணம் தற்கொலையா என்று தெரியவில்லை.
ரமேஷ் சவுத்ரி சில நாட்கள் விடுப்புக்குப் பின்னர் கப்பல் பணிக்குத் திரும்பிய நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த இளம் மாலுமியின் பெற்றோர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் வசிக்கின்றனர். அவருக்கு ஒரு தங்கையும் உள்ளார்.
மாலுமியின் மர்ம மரணம் குறித்து கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் மும்பை காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்''.
இவ்வாறு கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.