கோப்புப்படம் 
இந்தியா

கடந்த தேர்தலில் பணியில் கவனமின்மையாக இருந்த அதிகாரிகளை தேர்தல் பணியில் நியமிக்காதீர்கள்: 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

பிடிஐ


கடந்த தேர்தலில் பணியில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள், அதுதொடர்பாக விசாரணைக்கும், தண்டனைக்கும் ஆளான அதிகாரிகளை தேர்தல் பணியில் நியமிக்க வேண்டாம் என்று தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தலைமைத் தேர்தல்ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் தமிழகம், கேரளா, அசாம், மே.வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி அவ்வப்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களுக்கும், தலைமைச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 5 மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் “ கடந்த தேர்தலில் பணியில் கவனக்குறைவாக இருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகள், அந்த விசாரணை நிலுவையில் இருக்கும் அதிகாரிகள், தண்டனை பெற்ற அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் ஆகியோரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்

அதேபோல ஓய்வு பெறுவதற்கு 6 மாதகாலம் இருக்கும் அதிகாரிகள் யாரையும் தேர்தல் தொடர்பான பணியி்ல் ஈடுபடுத்த வேண்டாம்.

தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் அவர்களுக்கு அதே மாவட்டத்தில் தேர்தல் பொறுப்புகள் வழங்காமல் தவிர்க்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு அதிகாரி தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிவந்தாலும், அந்த அதிகாரிக்கும் அதே இடத்தில் தேர்தல் பணி வழங்குவதையும் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் போது, தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு இதுபோன்று அறிவுறுத்தல்களை வழங்குவது இயல்பாகும். நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் எனும் நோக்கில் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

SCROLL FOR NEXT