இந்தியா

ஆர்எஸ்எஸ் நிர்வாகி எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.3 கோடி ஏமாற்றிய ஜோதிடர்: குட்டி ராதிகாவுக்கு ரூ.1.25 கோடி கொடுத்தது பற்றி பெங்களூரு போலீஸார் விசாரணை

இரா.வினோத்

பெங்களூருவில் ஜோதிடர் ஒருவர் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி எனக் கூறி, மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நாகர்பாவியைச் சேர்ந்தவர் யுவராஜ் சுவாமி (52). பாஜக ஆதரவாளரான இவர் ஜோதிடம், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். விஜயநகரைச் சேர்ந்த ஒருவருக்கு மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.8 கோடி மோசடி செய்ததாக கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

யுவராஜ் சுவாமி மீது மேலும் சிலர் இதே போன்ற புகாரை தெரிவித்ததால் இவ்வழக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் யுவராஜ் சுவாமி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவர் யுவராஜ் தன்னிடம் ரூ.8.3 கோடி மோசடி செய்ததாக புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘‘எனக்கு பழக்கமான ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மூலம் யுவராஜ் சுவாமி கடந்த 2018-ல்அறிமுகமானார். தன்னை மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி என அறிமுகம் செய்துகொண்ட அவர், தேசிய அளவிலான பாஜக மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தைக் காட்டினார். மேலும் கர்நாடக பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தனக்கு நண்பர்கள் என கூறினார்.

எனது ஜாதகத்தைப் பார்த்த யுவராஜ் சுவாமி, "அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மத்திய அரசில் முக்கிய பொறுப்புக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது" எனகூறினார். இதற்காக என்னிடம் ரூ.3.8 கோடி பணம் வாங்கினார். எனக்கு சொந்தமான நிலம், அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை விற்று அவருக்கு அந்தப் பணத்தை கொடுத்தேன்.

என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்று பாஜக மூத்த‌ தலைவர்களை சந்திக்க வைத்தார். ஆனால் எதிர்பார்த்ததை போல எனக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. யுவராஜ் சுவாமி என்னிடம்மேலும் ரூ.5 கோடி ப‌ணம் கேட்டார்.என்னிடம் பணம் இல்லாத நிலையில், என் பெயரைச் சொல்லி என்உறவினர்களிடம் ரூ.4.5 கோடி பணம் வாங்கினார்.

ஒருகட்டத்தில் எனக்கு எந்தப் பொறுப்பும் வேண்டாம் எனக்கூறி, என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். அதற்குப் பிறகு என்னிடம் பேசுவதைத் தவிர்த்த அவர், கூலிப்படை மூலம் என்னைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார். அவரோடு இருந்த ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளரும் புகார் அளிக்கக்கூடாது என எச்சரித்தார்'' என தெரிவித்துள்ளார்.

குவியும் புகார்கள்

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் யுவராஜ் சுவாமி மற்றும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் யுவராஜ் வீட்டில் இருந்து ரூ.2.1 கோடி ரொக்கப்பணம், ரூ.1.7 கோடி மதிப்பிலான 3 சொகுசுகார்கள், ரூ.91 கோடி மதிப்பிலான 100 கசோலைகள், 26 இடங்களில் வாங்கப்பட்ட பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன் மகளுக்கு கர்நாடக அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக யுவராஜ் சுவாமி மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஓய்வுபெற்ற பொறியாளர் ஒருவர் தன் மகனுக்கு பெங்களூரு மாநகராட்சியில் உதவி நிர்வாக பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். யுவராஜ் சுவாமி மீது ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடி புகார்கள் குவிந்து வருவதால் பல கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குட்டி ராதிகாவிடம் விசாரணை

இதனிடையே யுவராஜ் சுவாமி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவியும் நடிகையுமான குட்டி ராதிகாவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.25 கோடி வழங்கியது தெரியவந்தது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸ் துணை ஆணையர் நாகராஜ் நேற்றுமுன்தினம் குட்டி ராதிகாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது அவருக்கும் யுவராஜ்சுவாமிக்கும் உள்ள தொடர்பு,பணப் பரிவர்த்தனை குறித்துகேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு குட்டி ராதிகா, ‘‘யுவராஜ் சுவாமியை எனக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாகதெரியும். அவர் என் குடும்ப ஜோதிடர். என் தந்தையின் இறப்பைமுன்கூட்டியே சரியாக கணித்ததால் அவர் சொல்வதை எல்லாம் நம்பினேன். அவர் தயாரிக்கும் ஒரு வரலாற்று படத்தில் நடிப்பதற்காக என் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சமும், என் சகோதரர் ரவி ராஜ்கணக்கில் ரூ.75 லட்சமும் அனுப்பினார். இதில் எவ்வித முறைகேடும் இல்லை. இந்த விவகாரத்தில் நானும் என் சகோதரரும் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT