பிரிட்டன் பிரதமர் வருகை ரத்தானதையடுத்து, இந்திய வம்சாவளி யைச் சேர்ந்த சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், பிரிட்டனில் உருமாறிய கரோனா வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து அங்கு மீண்டும்முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தனது இந்தியபயணத்தை ரத்து செய்தார். கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியை கவனிக்க வேண்டி உள்ளதால், குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசு தின விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
கடந்த 2 தினங்களுக்கு முன்புவெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இதில்சந்தோகி காணொலி மூலம்சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.