இந்தியா

நிர்வாகத் தடுப்புக்காவல் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும்: அம்னெஸ்டி கோரிக்கை

ஆர்.ஷபிமுன்னா

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 3,200-க்கு மேற்பட்டோர் குற்றம், விசாரணை ஏதுமின்றி நிர்வாகத் தடுப்புக்காவல் சட்டங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது, மனித உரிமை மீறல் என்பதால் அவற்றை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் என்று அம்னெஸ்ரி இண்டெர்நேஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒவ்வொரு அரசுக்கும் நியாயமான வழக்கு விசாரணை உரிமைகளை மதிக்க வேண்டிய கடமை உள்ளது. எந்த நல்ல காரணமும் இன்றி மக்கள் சிறையில் அடைக்கப்படும்போது கிரிமினல் நீதி பரிபாலனம் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறது. நிர்வாகத் தடுப்புக்காவல் நியாயமான வழக்கு விசாரணையின் பாதுகாப்பு அம்சங்களை முடக்குகிறது. நிர்வாகத் தடுப்புக்காவல் சட்டங்களை உச்சநீதிமன்றம் ‘சட்டமில்லா சட்டங்கள்’ என்று கூறியுள்ளது.

தேசிய குற்றங்கள் ஆவண வாரியத்தின் தகவலின்படி 2014 டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும உள்ள சிறைகளில் இவ்வாறு 3,200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களுக்காக மாநில அரசு நிர்வாகங்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை எந்த குற்றப்பதிவும், விசாரணையும் இன்றி சிறைகளில் அடைக்கின்றன.

அப்பாவிகள் தண்டிக்கப்படுவதைக் குறைப்பதற்காக கிரிமினல் நீதி பரிபாலனம் உள்ளது. ஆனால் இந்தியாவின் நிர்வாகத் தடுப்புக்காவல் சட்டங்கள் இணையான முறையாக செயல்படுகின்றன. எனவே நிர்வாகத் தடுப்புக்காவல் சட்டங்களை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT