மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 - 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட் டணி அரசில் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந் தார். இவரது பதவிக்காலத்தில் உத்தர பிரதேச மாநிலம் பெரெய்லி யில் உள்ள ரோஹில்கண்ட் மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலையீட்டின் பேரில், கடந்த 2009-ம் ஆண்டு லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. மேலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மருத்துவக் கல்லூரியில் போதிய ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள் இல்லாத நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணைக் குழு பரிந்துரைகளை மீறி, இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அன்புமணி அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளில் அன்புமணி மற்றும் 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், கூட்டு சதி, லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபடுதல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து வாதிடப்பட்டது. இதன் மீதான தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி ஒத்திவைத்திருந்தது.
அடிப்படை முகாந்திரம்
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். நவம்பர் 2-ம் தேதிக்கு இரண்டு வழக்குகளும் ஒத்திவைக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 5பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 10 பேரும் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதி கிடைக்கும்: அன்புமணி நம்பிக்கை
அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையிலும், முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயர் இல்லை. ஆனால், 2012-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் சேர்க்கப்பட்டது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்கக் கோரி விடுவிப்பு மனு தாக்கல் செய்தேன். இந்த மனு இன்று (அக். 7) நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். அதன் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும். என அன்புமணி தெரிவித்துள்ளார்.