மோடி ஜி முதலாளிகளை விட்டு விலகுங்கள். விவசாயிகளுக்கு ஆதரவளியுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அம்மாநிலத்தின் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் எல்லைகளில் இந்தப் போராட்டம் 46-வது நாளாகத் தொடர்கிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியை விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு இன்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "இன்னும்கூட நேரம் இருக்கிறது மோடி ஜி. உணவளிக்கும் விவசாயிகளை ஆதரியுங்கள். முதலாளிகளை விட்டு விலகுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் செய்தியுடன், 2018 ஏப்ரல் மாதம் மக்களவையில் தனது உரையில் இருந்து ஒரு வீடியோவைவும் ராகுல் பகிர்ந்து கொண்டார். வீடியோவில் விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சிப்பதும் இடம் பெற்றுள்ளது.