டெல்லியில் அவுரங்கசீப் சந்துகளின் பெயர்ப் பலகைகளை கருப்பு மை தெளித்து அழிக்க முயன்ற 11 பேரை வளைத்த போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
டெல்லியின் கிழக்குப் பகுதியிலுள்ள பிரதான பகுதியில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலை அமைந்துள்ளது. இதற்கு முன் அதற்கு அவுரங்கசீப் சாலை என்ற பெயர் இருந்தது.
இப்பெயரைக் கடந்த ஆகஸ்ட் 28, 2015இல் புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் மாற்றப்பட்டது. இதை, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரபல வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் பாஜகவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
எனினும், இச்சாலையின் குறுக்கே அமைந்துள்ள அவுரங்கசீப் சந்துகளின் பெயர்கள் மாற்றப்படாமலேயே உள்ளன. நேற்று இவற்றின் மீது கருப்பு மை தெளித்து அழிக்கும் முயற்சி நடந்தது.
இத்தகவலை அறிந்த அப்பகுதியின் துக்ளக் சாலை காவல் நிலைய போலீஸார், விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தனர். இதில், அங்கிருந்த 11 பேரை வளைத்துக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடைபெறுகிறது.
இதுபோல், அவுரங்கசீப் சந்துகளின் பெயர்ப் பலகைகளை மையிட்டு அழிக்கும் முயற்சி முதன்முறையல்ல. இதற்கு முன்பும் சில முறை மையிட்டு அழிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
அவுரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என முதன்முதலில் கோரிக்கை வைத்தவர் பாஜக எம்.பியான மஹேஷ் கிரி. இதற்காக அவரைப் பாராட்டி டெல்லியின் ஒரு பொதுநல அமைப்பு கடந்த பிப்ரவரி 10, 2018இல் ’வீர சிவாஜி’ விருது அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.