அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து(இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) அளிக்கும் முயற்சியை மத்திய அரசு இன்னும் கைவிடவில்லை என மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியால் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியின் விரிவாக்கம் பின்வருமாறு:
நாடாளுமன்ற கூட்டத்தொடர் விவாதத்தை தவிர்க்கும் நோக்குடன் கரோனா காலத்தில் புதிய கல்விக் கொள்கையை(என்இபி) மத்திய அரசு கொண்டு வருவதாக எதிர்க் கட்சியினர் புகார் கூறுகின்றனரே?
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் என்இபி உருவாக்கும் பணி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியது. மனிதகுல வரலாற்றில் அதிகம் கலந்து ஆலோசிக்கப்பட்ட கொள்கையாக என்இபி இருக்கும் என நம்புகிறேன். இதில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து நிலையிலும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களுடனும் உரையாடி அவர்கள் மாநிலங்கள் சார்ந்த கருத்துகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பேச்சுவழக்கில் இல்லாத சம்ஸ்கிருதத்திற்கு என்இபி-யில் அதிக முக்கியத்துவம் அளிக்கக் காரணம் என்ன? குழந்தைகளின் வளர்ச்சிக்கு பதிலாக உங்கள் கட்சியின் இந்துத்துவா கொள்கையை அமலாக்குவது போல் தெரிகிறதே?
அப்படி ஒரு தோற்றம் தெரிகிறதே தவிர, உண்மையில் அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் என்இபி சம முக்கியத்துவம் அளிக்கிறது. சம்ஸ்கிருதத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, பாலி, பெர்சியன், போன்ற பிற தொன்மையான மொழிகளை கற்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி பயிற்சி என்பது மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவாமல் அவர்களை குலத்தொழிலுக்கு தள்ளும் எனப் புகார் எழுந்துள்ளதே?
மகாத்மா காந்தியும் தனது புதியவகை கல்வியில் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இதன் வழியிலேயே என்இபி அனுபவக் கல்வியை வலியுறுத்துகிறது. எனது கருத்துப்படி ‘சொற்பொழிவு கற்றல்’ என்பதிலிருந்து விலகி ‘செய்வதன் மூலம் கற்றல்’என்பதில் அதிக கவனம் செலுத்தும் தருணம் இது. என்இபி மூலம்தான் ஒவ்வொரு மாணவரும் 6-8 வகுப்புகளில் பொழுதுபோக்குடன் கூடிய கற்றலை மேற்கொள்ள முடிகிறது. இது அவர்களுக்கு முக்கிய கைவினைத் தொழில்கள் குறித்த அறிவு மற்றும் அனுபவத்தைக் கொடுக்கும். புத்தகப்பை தேவையில்லாத இந்த 10 நாள் பயிற்சியில் அனைத்து மாணவர்களும் பங்கேற்பார்கள். அவர்கள் உள்ளூர் தொழில் வல்லுநர்களிடம் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகள் விடுமுறை காலங்களிலும் கூட 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைக்கக் கூடும்.
தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை பெருகி வரும் சூழலில் 3 மற்றும் 5-ம் வகுப்புக்கு தேசிய அளவில் தேர்வு நடத்துவது சரியா? 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு தேர்வு ஏன்?
3 மற்றும் 5 –ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு என்பது நோயை கண்டறிவதற்கான பரிசோதனை போன்றதே ஆகும். ஒட்டுமொத்த கல்வி முறையையும் மேம்படுத்த இது எங்களுக்கு உதவும். என்இபி என்பது மாணவர்களை மையமாகக் கொண்ட கொள்கை ஆகும். மாணவர்களின் தேர்வுச் சுமையை போக்கவே ஆண்டுக்கு இருமுறை தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3 முதல் 5 வயது வரையிலான மழலையர் கல்வியை முறையான பள்ளிக் கல்வியின் கீழ் என்இபி கொண்டு வருவது மழலையருக்கு சுமையை ஏற்படுத்தாதா?
பதில்: என்இபி-யை உருவாக்கும் போது அனைத்தையும் உள்ளடக்கிய, பங்கேற்பு மற்றும் முழுமையான அணுகுமுறையை உறுதிப்படுத்த கல்வி அமைச்சகம் கடுமையான ஆய்வுகளை நடத்தியுள்ளது. இதன் முடிவில், ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில் 85 சதவீதத்துக்கும் மேலாக 6 வயதுக்கு முன்பே நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது. நீண்ட காலமாக பலகோடி குழந்தைகளுக்கு,குறிப்பாக சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு தரமான மழலையர் கல்வி (3-5 வயது கல்வி) கிடைக்கவில்லை. நமது கல்வி முறையில் அனைத்து குழந்தைகளும் பங்கேற்கவும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் வளர்ச்சி பெறவும் மழலையர் கல்வியில் வலுவான முதலீடு அவசியம் என அரசு நம்புகிறது.
உயர்கல்வியை தனியார்மயமாக்கி, அரசின் பொறுப்புகளை கைவிடச் செய்து, சமூகநீதியை மறுப்பதாக என்இபி அமைந்து விடும் எனப் புகார் கூறப்படுகிறதே?
பதில்: என்இபி-யை உருவாக்கும் போது பல்கலைக்கழக அங்கீகார நடைமுறையை படிப்படியாக அகற்றுவதற்கான யோசனை முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது. பெரிய பல்கலைக்கழகங்களில் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இணைந்துள்ளன என்பதுதான் பிரச்சினை. இதனால், இளங்கலை கல்வியின் தரம் குறைந்து அது, நமது உயர்க் கல்வியிலும் இயல்பாகத் தொடர்ந்து விடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தன்னாட்சி முறையில் இயங்கி பட்டம் வழங்கும் கல்லூரிகளை நிறுவுவதற்கு என்இபி-யில் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி தனியார்மயமாவதை தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை என்இபி கொண்டுள்ளது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்.
பல்கலைக்கழக அங்கீகரிப்பு முறை 15 ஆண்டுகளில் நீக்கப்பட்டு உருவாகும் தன்னாட்சி கல்லூரிகளால் பின் தங்கிய, கிராமப்புற
மாணவர்கள் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளதே? இது மெல்ல அரசுகளிடம் இருந்து தனியார் பெருநிறுவனங்களின் கைகளில் கல்லூரிகள் சென்று விடும் என அஞ்சப்படுகிறதே?
நீண்ட காலமாக, உயர்க்கல்வியை ஒழுங்குபடுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இதில், அதிகப்படியான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. இச்சூழலை கருத்தில் கொண்டு உயர்க்கல்வியை ஒரே குடையின் கீழ் கொண்டுவர ‘இந்திய உயர்கல்வி ஆணையம் (எச்இசி)’ புதிதாக அமைக்க என்இபி பரிந்துரைக்கிறது. இதில் தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே விதிமுறைகளின் கீழ் செயல்படும். நியாயமான கட்டணத்தில் அனைவரும் தரமான கல்வி பெறுவது உறுதி செய்யப்படும்.
அனைவருக்கும் தரமான உயர் கல்வி அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிச் சென்று, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? இவை அதிக கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்புள்ள நிலையில், இது கல்வியில் சாதி மற்றும் வகுப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்யுமே?
21-ம் நூற்றாண்டில் உலகளாவிய மக்களுக்கான கல்வித் தேவை உள்ளது. அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் தரமான கல்வி வழங்கும் உலகளாவிய கல்வி மையமாக இந்தியா மேம்படுத்தப்படும். வெளிநாட்டு மாணவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் உயர்க் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களுக்கான அலுவலகம் ஏற்படுத்தப்படும். இந்திய – வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் மாணவர் பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்படும்.
சிறப்பாக செயல்படும் இந்தியப் பல்கலைகழகங்கள் தங்கள் கிளைகளை வெளிநாடுகளில் அமைக்க ஊக்குவிக்கப்படும். இதுபோல் தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படும். எனினும் இவை இந்தியாவில் வணிக ரீதியில் செயல்பட அனுமதியில்லை. அனைத்து கல்வி நிறுவனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்துடன் (சிஐஐஎல்) இணைக்கவுள்ளதாக கூறப்படுவது உண்மையா?
இல்லை. இதுவரை அதுபோன்ற ஒரு திட்டம் எங்களிடம் இல்லை. மாறாக, செம்மொழியான தமிழை வளர்ப்பதில் எங்கள் அரசு உண்மையாக முயன்று வருகிறது. இதற்காகவே, சமீபத்தில் அதற்கு நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட்டார்.
சென்னையின் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து(இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) அந்தஸ்து அளிக்காமல் அதற்கான நிதியை வழங்க மத்திய அரசு முன்வருமா?
இந்த சிறப்பு அந்தஸ்து மூலம் ரூ.1000 கோடிக்கு மிகாமல், 50 முதல் 75 சதவீதம் வரை மத்திய அரசின் நிதியுதவி பெற முடியும். இதற்கான விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை திரும்பப் பெறுவதாக எங்கள் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். என்றாலும் இதற்கான முயற்சிகளை எங்கள் அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறவில்லை.
2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த காலத்தில் நடைபெறுமா?
ஜேஇஇ மெயின் தேர்வை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்துவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதற்காக பல்வேறு தரப்பினரும் அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்தத் தேர்வை முன்னுதாரணமாகக் கொண்டே பிஹார் தேர்தல் நடத்தப்பட்டது.
இதையடுத்து நீட் தேர்வையும் அதேவகையில் நடத்த நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் விரும்புகின்றனர். நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் காணொலி மூலம் நான் நடத்திய உரையாடலில் இது தெரியவந்தது. எனவே மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பிறகு 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான தேதி முடிவு செய்யப்படும்.