ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல் குண்டு வீச்சில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 9-ம் தேதியன்று லாரி மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. விபத்தில் காயமடைந்த லாரியின் கிளீனர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்தநாக், பிஜ்பெஹாரா உள்ளிட்ட தெற்கு காஷ்மீர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நிலைக்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் என்ன?
உதம்பூர் மாவட்டம் சிவ் நகர் பகுதியில் பந்த் நடைபெற்றதால் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதனுள் ஓட்டுநர் உட்பட 3 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். இதனால் லாரி தீப்பிடித்து எரிந்த போது அங்கிருந்த காவலர் ஒருவர் தீயை அணைக்க முயன்றுள்ளார். இதில், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் காவலர் ஆகிய மூவருக்கும் பலத்த தீக் காயம் ஏற்பட்டது.
தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜாகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காஷ்மீரில் போராட்டம்:
இந்நிலையில், அவரது இறுதி ஊரவலம் இன்று நடைபெறவிருக்கிறது. முன்னதாக, இச்சம்பவத்தை கண்டித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்றும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறால் என்ற நிலையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனையொட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, சபீர் அகமது ஷா ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.