ம.பி.யில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் 10 நாட்களில் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி குறித்து தவறான எண்ணங்களை பரப்ப வேண்டாம் என ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி கோவிஷீல்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த வாரம் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்தது, மேலும், இது ஒரு பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு வழி வகுத்தது. இதன் பிறகு நாட்டின் பல பகுதிகளிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற 42 வயது தீபக் மராவி என்ற தன்னார்வலர் 10 நாட்களில் உயிரிழந்துள்ளார். எனினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இறந்தவர் உடலில் விஷம் இருந்ததாக கூறப்பட்டது. உள்ளுறுப்பு சோதனைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் அறியப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
‘‘கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தவரின் உடல் உறுப்பு ஆய்வுகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும். அதற்குள்ளாக தடுப்பூசி குறித்து தவறான எண்ணங்களை பரப்ப வேண்டாம். ’’ எனக் கூறினார்.