தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் இருந்து நேற்று சிறைக்கு திரும்பினார். இதனிடையே அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி மும்பை நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாவது மனைவி இந்திராணி. அசாமை சேர்ந்த இவர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமானவர். முதல் திருமணத்தின் மூலம் ஷீனா போரா, மைக்கேல் போரா ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தபோது முதல் திருமணத்தை மறைத்த இந்திராணி, மகள், மகனை தனது தங்கை, தம்பி என்று அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவியின் மகன் ராகுல் முகர்ஜிக்கும் ஷீனா போராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் பணியாற்றிய ஷீனாபோரா 2012 ஏப்ரலில் மாயமானார். அவர் அமெரிக்காவில் குடியேறிவிட்டதாக அனைவரை யும் இந்திராணி நம்ப வைத்தார்.
மும்பை போலீஸாரின் ரகசிய விசாரணையில் ஷீனாபோராவை அவரது தாயார் இந்திராணியே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25-ல் அவர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சய் கன்னா, டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக அகமது ஜாவித் நியமிக்கப்பட்டார். அவர் பீட்டர் முகர்ஜிக்கும் இந்திராணிக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு விசாரணை அண்மையில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மும்பை பைகுலா சிறையில் உள்ள இந்திராணிக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை களை உட்கொண்டு தற்கொ லைக்கு முயன்றதாகக் கூறப்படு கிறது. மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. அவரது உடல் நலம் தேறியவுடன் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து பைகுலா சிறைக்கு திரும்பினார்.
சிபிஐ மனு தாக்கல்
இதனிடையே இந்திராணி, சஞ்சய் கன்னா, ஷியாம் ராய் ஆகியோரை 3 வாரங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மும்பை கூடுதல் மெட்ரோபாலிட்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ நேர்று மனு தாக்கல் செய்தது.
இதற்கு அனுமதி கிடைக்க வில்லை என்றால் மும்பை போலீ ஸார் ஏற்கெனவே மூவரிடமும் நடத்திய விசா ரணையை அடிப் படையாக வைத்து தொடர்ந்து விசாரிப்போம் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
சிபிஐயின் மனு குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் ஆர்.வி. அதானி தெரிவித்தார்.