பிரியங்கா காந்தி | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

பதாயு வழக்கில் பாதிக்கப்பட்டவர் மீதே குற்றம் சாட்டுவதா? - மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்துக்கு பிரியங்கா காந்தி கண்டனம்

ஏஎன்ஐ

பதாயு கூட்டுப் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டுவதா? என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்துக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் பதாயூ நகரின் மேவ்லி கிராமத்தின் சிவன் கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 வயது பெண் சென்றிருந்தார். அங்கு பூசாரியாக இருந்த சாதுவான சத்யநாராயாணா தன் சகாக்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான சாது சத்யநாராயணா உள்ளிட்ட மூன்று பேரையும் உத்தரபிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.

இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, இந்த சம்பவத்திற்கு பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதாயுவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்தித்த பின் சந்திரமுகி தேவி ஊடகங்களிடம் பேசியபோது, ''அப்பெண் தனியாக வெளியே போகாமல் இருந்திருந்தால், அது நடந்திருக்காது. அவர் மாலையில் வெளியே செல்லாமலிருந்தால் அல்லது ஒரு குடும்ப உறுப்பினருடன் சென்றிருந்தால், இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்தார்.

என்.சி.டபிள்யூ தலைவர் ரேகா சர்மா தேவியின் கருத்துக்களை பின்னர் கண்டித்தார், ''பெண்கள் எப்போது, எங்கு வேண்டுமானாலும் வெளியேற உரிமை உண்டு'' என்று அவர் கூறினார்.

இதுகுறித்து பேஸ்புக் பதிவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது:

''தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர், பதாயு கூட்டுப் பலாத்காரம் பற்றி பேசும்போது பாதிக்கப்பட்டவர்ள் மீதே குற்றம் சாட்டியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தது. அவர் கூறும் நடத்தை மூலம் பெண்களின் பாதுகாப்பை நம்மால் உறுதிப்படுத்த முடியுமா?

பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை முடிவை கசியவிட்டது யார் என்றுதான் பதாயு நிர்வாகம் கவலை கொண்டுள்ளது.

இந்த நேரத்தில், மொராதாபாத்தில் மற்றொரு கொடூரமான பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவர் மரணத்திற்கு எதிராக போராடுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த நிர்வாக நடைமுறையையும் இந்த அவமானத்தையும் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.’’

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT