பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அவர் சிறை விதிமுறைகளை மீறிய விவகாரம் விடுதலையாவதற்கு முட்டுக்கட்டையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2017, பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இவர்களின் தண்டனைக் காலம் வரும் பிப்ரவரியில் நிறைவடைய உள்ளது.
சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு மனு அளித்துள்ள நிலையில் அவர் வரும் 27-ம் தேதி விடுதலையாக இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த 2017-ல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா, “சிறையில் சசிகலா சொகுசு வசதிகளை அனுபவிப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடிலஞ்சம் கொடுத்துள்ளார்” என புகார் தெரிவித்தார். இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில்விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறி, சிறப்புசலுகை அனுபவித்தது உண்மை தான் என 2018-ல் அறிக்கை அளித்தது. சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் வினய் குமார்அறிக்கையால் அதற்கு சிக்கல்வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்படி நடப்போம்
இதுகுறித்து கர்நாடக உள்துறையின் புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள மாலினிகிருஷ்ணமூர்த்தியிடம், ‘இந்து தமிழ்திசை' நாளிதழ் சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், “நான் இந்தப் பொறுப்பை ஏற்று3 நாட்கள்தான் ஆகிறது. சலுகைக்கோரும் சசிகலாவின் மனுவை எனக்கு முந்தைய அதிகாரி (ரூபா) பார்த்திருப்பார். சசிகலா இம்மாத இறுதியில் விடுதலை ஆக இருக்கிறார். எனவே அவருக்கு எந்தசலுகையும் தற்போதைய சூழலில்தேவையில்லை. அவரது விடுதலைக்கு வினய்குமார் அறிக்கை தடையாக இருக்குமா என இப்போது கூற முடியாது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி, சசிகலா விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடந்துகொள்வோம்” என்றார்.
வருமான வரி வழக்கு தள்ளிவைப்பு
கடந்த 1994-95-ம் ஆண்டில் வி.கே. சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கில் ரூ.4 லட்சத்தை குறைத்துக் காட்டியதாக மதிப்பீட்டு அதிகாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை, வருமான வரித் துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. அதை எதிர்த்து வருமானவரித் துறை ஆணையர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.சுப்ரமணியன் ஆஜராகி, “சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் ஜன.27-ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக அவரிடமே விளக்கம் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை” என கோரினார். அதையேற்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்.4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.