இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை, (LASI), அலை-1-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் வெளியிட்டார்.
மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே லசி ஆகும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதியோருக்கான தேசிய சுகாதாரத் திட்டம், மும்பையிலுள்ள மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனம் மூலம், ஹார்வார்டு பொது சுகாதாரப் பள்ளி, தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம், தேசிய முதுமையடைதல் நிறுவனம் உள்ளிட்டவற்றுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் (சிக்கிம் தவிர) உள்ள 60 வயது, அதற்கு மேற்பட்ட வயதுள்ள 31,464 நபர்கள், 75 வயதுக்கு மேற்பட்ட 6,749 நபர்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள 72,250 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த அறிக்கையை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், “வயது முதிர்ந்தோர்க்கான கொள்கைகளை சமூக, சுகாதார, பொருளாதார நலனின் அடிப்படையில் வடிவமைப்பதற்கான இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மிகப்பெரிய ஆய்வறிக்கை இது,” என்றார்.
மேலும் பேசிய அவர், மூத்த குடிமக்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டத்தின் வீச்சை மேலும் விரிவுப்படுத்துவதற்கும், முதியோர்களுக்காகவும், அவர்களில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்காகவும் நோய்த்தடுப்பு, சுகாதாரத் திட்டங்களை நிறுவுவதற்கும் இந்த ஆய்வு உதவும் என்று கூறினார்.
இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை குறித்து பேசிய அமைச்சர், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள்தொகையில் 8.6 சதவீதம் பேர், அதாவது 103 மில்லியன் பேர், அறுபது வயதுக்கும் மேலானவர்கள் ஆவார்கள். ஆண்டு தோறும் 3 சதவீதம் என்னும் அளவில் வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகை, 2050-ஆம் ஆண்டில் 319 மில்லியனாக அதிகரிக்கும். முதியவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏதாவது ஒரு நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
40 சதவீதம் பேருக்கு உடல் ஊனம் உள்ளது, 20 சதவீதம் பேருக்கு மன நல சிக்கல்கள் உள்ளன. இவர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இந்த ஆய்வறிக்கை அடித்தளமாக இருக்கும்,” என்றார்.