மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் ஒரு மாதத்துக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி உட்பட வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர்,பனிப்பொழிவு நிலவுகிறது.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஹர்பிரீத் சிங் மட்டு என்பவர், டெல்லி சிங்கு எல்லைப் பகுதியில் கன்டெய்னர் டிரக் ஒன்றை தற்காலிக வீடாகமாற்றி உள்ளார். இந்த கன்டெய்னருக்குள் சோபா, படுக்கை, டிவி, கழிவறை, மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கன்டெய்னரை வீடாக மாற்றுவதற்கு ஒன்றரை நாள் ஆனதாகவும் இதற்கு தனது நண்பர்கள் உதவி செய்ததாகவும் ஹர்பிரீத் கூறுகிறார்.
இதுகுறித்து ஹர்பிரீத் சிங் கூறும்போது, "டிசம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் பங்கேற்க வந்தேன். என்னுடைய சகோதரர் அமெரிக்காவில் இருக்கிறார். விவசாயிகளுக்கு உதவும்படி அவர்என்னிடம் கூறினார். அதனால் இங்கு வந்தேன். எல்லாவேலைகளையும் விட்டுவிட்டு, சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு சேவை செய்தேன். எனக்குசொந்தமான 5 லாரிகளை டெல்லிக்கு கொண்டு வந்தேன். முதலில் ஓட்டலில்தான் தங்கினேன். ஆனால், வீட்டு நினைவுகள்வந்துவிட்டது. எனவே, கன்டெய்னர் ஒன்றை வீடாக மாற்றிவிட்டேன்" என்றார்.
சிங்கு எல்லையில் கடை திறந்துதின்பண்டங்கள், டீ, உணவு போன்ற பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் ஹர்பிரீத் சிங். இங்கு 24 மணி நேரமும் டீ வழங்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவருடைய கடையில் டீ அருந்தி செல்கின்றனர். ஹர்பிரீத் சிங்குடன் அவரது மனைவி, மகன்,உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் 90 பேர் உள்ளனர்.