உ.பி.யில் மயான கட்டிடம் இடிந்து விழுந்து 25 பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் பலவீனமாக உள்ள அரசு கட்டிடங்களை அடையாளம் கண்டு இடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யின் காசியாபாத் மாவட்டம், முராத் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனமழை காரணமாக மயானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இதில் அங்கு இறுதிச் சடங்குக்காக வந்திருந்த 25 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மாநிலம் முழுவதிலும் உள்ள பழைய கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றில் பலவீனமான மற்றும் உயிருக்கு ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இத்தகைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து உ.பி. அரசு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இது தொடர்பாக மண்டல ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தொழில்நுட்பக் குழு ஆய்வு மேற்கொள்ளும். அரசு பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளி, கல்லூரிகளையும் ஆய்வு செய்யுமாறு தொழில்நுட்பக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வில் அரசு கட்டிடங்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் உயிருக்கு ஆபத்தானதாக தெரியவந்தால், அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பே அரசுக்கு மிக முக்கியம் என்று முதல்வர் கூறியுள்ளார். இதனை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.