இந்தியா

ரூர்கேலா உருக்காலையில் விஷவாயு கசிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

ஒடிசாவில் உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனமான ரூர்கேலா உருக்காலையில் நேற்று காலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இந்திய உருக்கு ஆணையத்துக்கு (செயில்) சொந்தமான ரூர்கேலா உருக்காலை உள்ளது. இதன் நிலக்கரி ரசாயனப் பிரிவில் ‘ஸ்டார்கன்ஸ்ட்ரக் ஷன்’ என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர்கள் நேற்று காலையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் விஷவாயுக் கசிவுஏற்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து இவர்கள் அனைவரும் அங்குள்ள இஸ்பத் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள், கணேஷ் சந்திர பைலா (59), அபிமன்யு சாகு (33), ரவீந்திர சாகு (59), பிரம்மானந்த பாண்டா (51) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ரூர்கேலா உருக்காலையின் தலைமை செயல் அதிகாரி தீபக் சத்ராஜ் கூறியுள்ளார். மேலும் விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பதிவில், "ரூர்கேலா உருக்காலை விபத்தில்4 பேர் உயிரிழந்த செய்தி அறிந்துஆழ்ந்த துயரம் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT