இந்து கோயில் மற்றும் சிலைகளை சேதப்படுத்துவோரை உடனே கைது செய்யுங்கள் என ஆந்திர அரசுக்கு நடிகர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.
நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆந்திராவில் ஜெகன்மோகன் முதல்வரான பிறகு இதுவரை 100-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினருக்கு எதிராக சமூக வலைதளங்களில் யாரேனும் செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது போலீஸார் உடனே நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் இந்து கோயில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தாலும் இதுவரை ஒருவர் மீது கூட போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து பேசினால், எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதாகவும் மதவாதிகள் என்றும் முதல்வர் ஜெகன் முத்திரை குத்துகிறார்.
எதிர்க்கட்சியினர் கொரில்லா போர் தொடுக்கின்றனர் என்று கூறும் முதல்வர் ஜெகனின் சக்தி என்ன என்பது எங்களுக்குத் தெரியும். 151 எம்எல்ஏ-க்கள், 22 எம்.பி.க்கள், 115 ஐபிஎஸ் அதிகாரிகள், 115 உதவி ஐபிஎஸ் அதிகாரிகள் என சக்திவாய்ந்த முதல்வர்தான் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இத்தனை பேர் இருந்தும் என்ன பயன்? இந்தக் குறைபாடு எங்கு உள்ளது ? உங்களிடமா? அல்லது உங்கள் அரசு அதிகாரிகளிடமா?
உங்களால் மடாதிபதிகள், பீடாதிபதிகள் சாலையில் இறங்கிப் போராடும் நிலைக்கு வந்துள்ளனர். இனியாவது இந்த சதிச் செயலுக்கு யார் காரணம்? அவர்களின் நோக்கம் என்ன ? அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.