இந்திய-ஆப்ரிக்க உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் தொடர்ச்சியாக கூறியிருப்பதாவது:
ஆப்ரிக்க நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவு வரலாற்று சிறப்புமிக்கது. ஆப்ரிக்காவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளுடனான வர்த்தகம் சமீப காலமாக வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்தத் தருணத்தில் இந்திய-ஆப்ரிக்க உச்சி மாநாட்டை நடத்து வதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரும் காலத்தில் வர்த்தகத்தை மேலும் பலப்படுத்திக் கொள் வதில் இருதரப்பும் முனைப்புடன் செயல்பட்டு வருவதை பிரதி பலிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின்போது, இருதரப்பு நட்பு மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர் பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த மாநாடு வரும் 26-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. 4 நாட்களுக்கு நடைபெறும் இதில் சுமார் 40 நாடுகள் மற்றும் ஆப்ரிக்க யூனியனின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 54 பிரதி நிதிகளும் 400க்கும் மேற்பட்ட தொழில் துறையினரும் கலந்து கொள்கிறார்கள்.
இருதரப்பு வர்த்தக உறவு குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு ஆகியவற்றை பலப்படுத்துவது மற்றும் அனைத்து வகையான இருதரப்பு உறவையும் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். ஆப்ரிக்க நாடுகளுடனான இந்திய வர்த்தகம் இப்போது ரூ.4.87 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.