இந்தியா

தாத்ரி கிராமத்தில் ஒருவரை கொன்றது திட்டமிட்ட சதி: நடவடிக்கை எடுப்பதாக சமாஜ்வதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உறுதி

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம், தாத்ரி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். இது தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் கவலைப்படமாட்டோம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

தாத்ரி சம்பவம் தொடர்பாக தனது மவுனத்தை கலைத்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த 3 பேர்தான் திட்டமிட்டு இந்த சம்பவத்தை நிறைவேற்றி உள்ளனர். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஒரு குழுவானது தாத்ரிக்கு அனுப்பிவைக்கப்படும். அப்போது அந்த 3 பேரின் விவரம் தெரியவரும்.

அதன்பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் அந்த தியாகத்துக்கு தயாராக இருக்கிறோம். வகுப்புவாத சக்திகளை நறுக்குவோம்.

தாத்ரி சம்பவம் குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஒடுக்க மேற்கொள்ளப்படும் சதி. இந்த சதி வெற்றி பெற சமாஜ்வாதி அனுமதிக்காது. அரசுக்கு எதிராக வகுப்புவாத சக்திகள் சதித் திட்டம் தீட்டுகின்றன.

ஆனால் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மாநில அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெளிப்படையான விசாரணை

தாத்ரி சம்பவம் குறித்து கவுதம புத்தர் நகர் மாவட்ட ஆட்சியர் என்.பி.சிங் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தாத்ரி கிராமம் அமைதியாக உள்ளது. அந்த கிராமத்துக்கு செல்வதை மக்கள் தவிர்த்தால் அது பற்றி பேச்சு எழாது.தாத்ரி கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நடுநிலையாக விசாரணை நடத்தப்படுகிறது. இதனால் மக்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. கிராமத்து மக்களை கூட்டி அமைதிக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தேவையின்றி வதந்தி பரப்பப்படுவது தடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT