சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம் 
இந்தியா

விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது; அரசியல் செய்ய விரும்புகிறார்கள்: மத்திய அரசு மீது சிவசேனா குற்றச்சாட்டு

ஏஎன்ஐ

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை. அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள் என மத்திய அரசு மீது சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கங்களுக்கும் இடையே 7 கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வரும் வெள்ளிக்கிழமை 8-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதுவரை இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''டெல்லியில் உறையும் குளிரில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை 50 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் விவசாயிகளும் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறத் தயாராக இல்லை.

இதுவரை 8 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லையென்றால், பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசுக்கு விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். இதில் மத்திய அரசு அரசியல் செய்கிறது.

டெல்லியில் உறையும் குளிர், கடந்த சில நாட்களாகப் பெய்யும் மழையால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கியிருக்கும் குடில்களில் மழைநீர் புகுந்து அவர்களின் உடைகள், படுக்கைகளை நனைத்துவிட்டன. ஆனாலும், விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெறவில்லை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் அவர்கள் செல்வதில்லை எனத் தீர்மானமாக இருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் 50 பேர் உயிர்த்தியாகம் செய்தபோதிலும் அதற்கு மதிப்பில்லை, மத்திய அரசின் பார்வை அதில் விழவில்லை. இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

மத்திய அரசுக்கு உண்மையிலேயே ஆன்மா இருந்தால், உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT