டெல்லியில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஹனுமர் கோயில் இடிக்கப்பட்டது. இதை மீண்டும் கட்ட வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினரான விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங்தளம் நேற்று போராட்டம் நடத்தியது.
நாட்டின் தலைநகரான டெல்லியின் பிரதானப் பகுதியான சாந்தினி சவுக்கை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பிலான இப்பணியில் அங்கிருந்த ஹனுமர் கோயில் நேற்று முன்தினம் ஞாயிறு அன்று இடிக்கப்பட்டது.
இதையடுத்து, கோயில் இடிக்கப்பட்ட பின் நேற்று இந்துத்துவாவினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இக்கோயிலை மீண்டும் கட்டித்தர அந்த அமைப்புகளின் சார்பில் டெல்லி அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக சாந்தினி சவுக்கில் கூடிய விஎச்பி மற்றும் பஜ்ரங்தளம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். முன்னதாக, அங்குள்ள கவுரி சங்கர் கோயிலுன் முன்பாகக் கூடியவர்கள் காவிநிறக் கொடிகளுடன் இடிக்கப்பட்ட ஹனுமர் கோயில் பகுதிவரை ஊர்வலமும் நடத்தினர்.
இதை அவர்கள் அனுமதியின்றி நடத்தியதாகவும், கரோனா பரவல் தடை உத்தரவையும் இதில் மீறியதாகவும் சாந்தினிசவுக் காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவானது. விஎச்பியின் டெல்லி தலைவர் கபில் கண்ணா, உபதலைவர் சுரேந்தர் குப்தா, செயலாளர் ரவிஜி, பஜ்ரங்தளத்தின் மாநில அமைப்பாளர் பரார் பத்ரா, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பகுதியின் வடக்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷன் நிர்வாகம் பாஜகவிடம் உள்ளது. எனவே, இக்கோயில் இடிக்கக் காரணம் பாஜக தான் என டெல்லியில் ஆளும் அரசான ஆம் ஆத்மி புகார் கூறி வருகிறது.
இதில், பாஜகவின் வடக்கு டெல்லி முனிசிபல் கார்பரேஷன் சார்பிலான பிராமணப்பத்திரம் தாக்கலுக்கு பிறகே, உயர் நீதிமன்றம் கோயிலை இடிக்க உத்தரவிட்டதாகக் குறிப்பிடுகிறது.
இதற்காக அப்பகுதியின் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான சவுரப் பரத்வாஜ், விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இவர், பாஜக எம்.பியான விஜய் கோயலுக்கு நெருக்கமான ‘மனுஷ்ய சங்கதன்’ அமைப்பும் கோயிலை இடிக்கக் கோரி மனு அளித்ததாகவும் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து டெல்லி பாஜகவின் செய்தி தொடர்பாளரான பிரவின் சங்கர் கூறும்போது,
‘‘கடந்த இரண்டு நாட்களாக ஆம் ஆத்மி கட்சியினர் கோயில் இடிக்கப்பட்டதன் மீது பொய்யானத் தகவல்களை பரப்புகின்றனர்.
சாந்தினி சவுக்கின் அழகுப்படுத்தும் பணியை துவக்கம் முதல் பாஜக எதிர்த்து வருகிறது. இதற்கு சில கோயில்கள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது காரணமாகும்.’’ எனத் தெரிவித்தார்.