இந்தியா

பிஹாரில் அமைச்சரவை விரிவாக்கத்தில் சிக்கல்: சரிபாதி எண்ணிக்கையை நிதிஷ் கேட்பதால் திணறும் பாஜக

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) ஆட்சியில் அமைச்சரவை விரிவாக்கம் சிக்கலாகி விட்டது. இதில் சரிபாதி எண்ணிக்கையை தம் எம்எல்ஏக்களுக்கு நிதிஷ் கேட்பதால் முடிவெடுக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பின் நவம்பர் 14 இல் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான நிதிஷ்குமார் பதவி ஏற்றார். துணை முதல்வர்களாக இருவரை பாஜக அமர்த்தியது. இதன் அமைச்சர்களாக 14 பேர் பதவி ஏற்றனர்.

தற்போது ஒவ்வொரு அமைச்சருக்கும் 4 முதல் 5 துறைகள் என அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், பிஹாரின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

எனவே, பிஹாரின் அமைச்சரவையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 234 எம்எல்ஏக்கள் கொண்ட பிஹாரில் 15 சதவிகித அமைச்சர்களாக அதிகபட்சமாக 36 பேரை அமர்த்தலாம்.

இந்நிலையில், அதிகமான எம்எல்ஏக்களாக 74 பெற்ற பாஜக, தம் கட்சியினருக்கு அதிக அமைச்சர்களை அமர்த்த விரும்புகிறது. இதைவிடக் குறைவாக 43 பெற்றும் ஜேடியு, தம் எம்எல்ஏக்களுக்கு குறைவான அமைச்சர்களை ஏற்கத் தயாராக இல்லை.

மாறாக பாஜகவிற்கு சரிசமமாக பாதி எண்ணிக்கையில் தனது எம்எல்ஏக்களை அமைச்சர்களாக அமர்த்த வலியுறுத்துகிறது. இதனால், அமைச்சரவை விரிவாக்கம், பாஜகவிற்கு சிக்கலாகி விட்டது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பிஹாரின் பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘கடந்த ஆட்சிகளில் தன் எம் எல் ஏக்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி நிதிஷ் அதிக அமைச்சர்களை அமர்த்தினார்.

இதையே இப்போது அவர் ஏற்கத் தயாராக இல்லை. அமைச்சரவை விரிவாக்கத்திலும் பிரச்சனையானால் நிதிஷ், என்டிஏவிலிருந்து வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது நிகழாமல் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என எங்கள் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை செய்து வருகின்றனர்.’ எனத் தெரிவித்தனர்.

தம் நெருங்கியக் கூட்டணியாக இருந்தும் சட்டப்பேரவை தேர்தல் துவங்கியது முதல் நிதிஷ், பாஜகவால் குறி வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதே கூட்டணியிலிருந்து வெளியேறிய சிராக் பாஸ்வான், தன் வேட்பாளர்களை ஜேடியு போட்டியிடும் இடங்களில் நிறுத்தினார்.

இதை பாஜகவும் தடுக்க முன்வரவில்லை என்ற ஆதங்கம் நிதிஷுக்கு உள்ளதாகவும் கருதப்படுகிறது. இதனால், பாஜகவை விடக் குறைந்த தொகுதிகள் கிடைத்தமைக்கு அக்கட்சியே காரணம் எனக் ஜேடியுவினர் இடையே புகார் எழுந்தது.

பிறகு, ஏற்கெனவே துணை முதல்வராக இருந்த சுசில்குமாரை மீண்டும் தொடர வைக்காமல், புதிதாக இருவரை அமர்த்தியதிலும் நிதிஷ் அதிருப்தியாக உள்ளார். இதையடுத்து அருணாச்சாலப் பிரதேசத்தில் அவரது கட்சியின் 7 எம்எல்ஏக்களை பாஜகவில் இழுத்ததும் பிரச்சனையாகி விட்டது.

இந்நிலையில், வெறும் 15 தொகுதிகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த மெகா கூட்டணியிலிருந்து நிதிஷுக்கு மீண்டும் அழைப்பு வந்தபடி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் பிஹாரில் ஆட்சி மாற்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற சூழல் தொடர்கிறது.

SCROLL FOR NEXT