இந்தியா

பறவைக்காய்ச்சல் அபாயம்: கண்காணிக்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

செய்திப்பிரிவு

பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங் களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் இறந்தன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரி சோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (எச்5என்8) தொற்று இருப்பது உறுதியானது.

நோய் தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மனிதர்கள் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப்பண்ணை கள் அதிகம் உள்ளன. வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கேரள கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நோய்ப் பரவலைத் தடுக்க சுமார் 36 ஆயிரம் வாத்துகளை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நோய்த் தடுப்பு நட வடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக டெல்லியில் மத்திய கால்நடை வளர்ப்புத்துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் தற்போது பரவியுள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT