பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம் 
இந்தியா

சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு: சமையல் எண்ணெய் விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்திய அதானி நிறுவனம்

பிடிஐ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் நடித்த ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விளம்பரத்தைத் தற்காலிகமாக அதானி வில்மர் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

அதானி வில்மர் நிறுவனம் சார்பில், ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விளம்பரத்தில் சவுரவ் கங்குலி நடித்துள்ளார். ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் இதயத்துக்கு நல்லது என்று கங்குலி சொல்வதுபோல் விளம்பரம் இருந்தது. ஆனால், விளம்பரத்தில் நடித்த கங்குலியே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது வாடிக்கையாளர்கள் மத்தியில் தவறான நம்பிக்கையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதால், தற்காலிகமாக அந்த விளம்பரத்தைத் தொலைக்காட்சிகளில் திரையிட வேண்டாம் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கங்குலி மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், அவர் நடித்த சமையல் எண்ணெய் தொடர்பான விளம்பரங்களைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் வெளியாகின. இதையடுத்து, உடனடியாக அந்த விளம்பரங்களை நிறுத்தி அதானி வில்மர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், சவுரவ் கங்குலியே தங்கள் நிறுவனத்தின் தூதராகத் தொடர்வார். அவர் உடல்நலன் பெற்றுத் திரும்பியதும் வழக்கம் போல் அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் என அதானி வில்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதானி வில்மர் துணை தலைமை நிர்வாக அதிகாரி அங்சு மாலிக் கூறுகையில், “ சவுரவ் கங்குலியுடன் தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். எங்கள் நிறுவனத்தின் தூதராக கங்குலி இருப்பார். எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தைத் தற்காலிகமாக ஒளிபரப்புவதை நிறுத்தியுள்ளோம். சவுரவ் கங்குலி நலம் பெற்றதும் மீண்டும் ஒளிபரப்பாகும். இது துரதிர்ஷ்டமான சம்பவம். யாருக்கு வேண்டுமானாலும் இதுபோன்று நடக்கலாம்.

நாங்கள் தயாரிக்கும் ரைஸ் பிரான் ஆயில் உடலில் உள்ள மோசமான கொழுப்புகளை நீக்கி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். எங்களின் அடுத்த விளம்பரங்களுக்கும் கங்குலியே தூதராக இருப்பார். ரைஸ் பிரான் சமையல் எண்ணெய் மருந்து அல்ல, அது சமையல் எண்ணெய் மட்டும்தான். ஒருவரின் இதயத்தைப் பாதிப்பதற்கு பலவிதமான காரணிகள் உள்ளன, உணவு முறை, சூழல் இயங்குமுறை, குடும்பப் பாரம்பரியம் எனப் பல காரணங்கள் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் நிறுவனமும், குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனமும் இணைந்து கடந்த 1999-ல் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபார்ச்சூன் எண்ணெய் மட்டுமல்லாது, கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, சோயா போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT