ஒரு முறை எம்எல்ஏ ஒருவருடன் வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அவர் அமைச்சராக இருக்கிறார். அரசியலில் நிலவும் ஊழல் பற்றியும் அரசியல்வாதிகள் பணத்தை எப்படி செலவழிக்கின்றனர் என்பது பற்றியும்தான் எங்கள் பேச்சு இருந்தது. அப்போது அந்த எம்எல்ஏ, “தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் செலவிடும் பணத்தில், 50 சதவீதம் நேரடியாக வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்படுகிறது” என்று என்னிடம் தெரிவித்தார். வாக்குப் பதிவு நடக்கும் நாளின் பிற்பகலுக்கு மேல் மீதமுள்ள 50 சதவீத பணத்தை செலவிடுகின்றனர். பிற்பகல் வரை வேண்டுமென்றே ஓட்டு போடாதவர்களுக்கு பணத்தைக் கொடுத்து ஓட்டளிக்க வைக்கின்றனர் என்றார். அதனால்தான் தேர்தலின் போது அரசியல்வாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யும் செய்திகள் வெளிவருகின்றன.
பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி எடுத்த புள்ளிவிவரம் பற்றிய செய்தி வெளியான போது, அந்த எம்எல்ஏ.வுடன் பேசியதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த புள்ளிவிவரத்தில், வாக்களிக்க பணம் பெறுவது அல்லது பரிசு பெறுவது லஞ்சமாகாது அல்லது தார்மீக ரீதியாக தவறாகாது என்று 80 சதவீத வாக்காளர்கள் நினைப்பதாக கூறப்பட்டிருந்தது. 4,500 வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அறிவியல்பூர்வமாக சரியாக இருப்பதும் தெரிய வந்தது.
பிஹார் வாக்காளர்களின் இந்த மனநிலையை மாற்ற ஆங் காங்கே சுவரொட்டிகள் மூலம் தேர்தல் ஆணையம் பிரச் சாரத்தில் ஈடுபட்டது. வாக் களிக்க பணம் பெறுவது குற்றம் என்று தீவிர பிரச்சாரம் செய்யப் பட்டது (பிஹார் சட்டப்பேரவைக்கு நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது). வாக்களிக்க பணம், பரிசு பெறும் மனநிலை பிஹாரில் மட்டும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மேலே நான் சொன்ன அந்த அரசியல்வாதி கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி யினர் எப்படி செய்தித் தாள்களில் பணத்தை வைத்து வீடுகளுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர் என்ற செய்தி வெளியானது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் அவரவர் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைகளை வெளியிடும் பத்திரிகையை வாங்குகின்றனர். இது தங்களுக்குள்ள வாக்கு வங்கி அல்லது வாக்காளர்களை அடை யாளம் காண்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு எளிதாகி விடுகிறது.
மேலும், வாக்காளர்களுக்கு வேட்டி, புடவைகள், மது மற்றும் பிற பொருட்களை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் விநியோகம் செய்யும் செய்திகள் ஏராளமாக வெளிவருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் குடிசைப் பகுதி மக்களை மட்டுமே இலக்காக வைத்து வழங்கப்படுவதாக தெரிகிறது. நடுத்தர குடும்பத்தினரிடம் இந்த பாதிப்பு அவ்வளவாக இல்லை. ஆனால், இதுபோல் ஏழைகளுக்கு மட்டும் பணம் கொடுத்து வாக்கு சேகரிப்பதற்கான ஆதாரம் அல்லது புள்ளிவிவரங்கள் இல்லை.
பிஹார் தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வு மூலம், நமது சமூகத்தைப் பற்றியும் சமூகத்தில் உள்ள குறைகள் பற்றியும் தேவை யான அளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை என்பது தெரிகிறது. ஊடகங்களும் அரசியல்வாதிகள் அல்லது அரசாங்கத்தை பற்றி மட்டுமே விவாதித்து கொண்டிருக் கிறது. அரிதாக நம்மை பற்றி, மக்களைப் பற்றி விவாதம் நடத்துகிறது.
இந்தியர்களில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டும்தான் வரி செலுத்துகின்றனர். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மாத ஊதியம் பெறுபவர்கள்தான் (வேலை செய்யும் நிறுவனமே வரியை பிடித்தம் செய்துவிடும்) வரி செலுத்துகின்றனர். இதிலும் பல்வேறு விலக்குகளை அது தகுதியில்லாத போதிலும் கணக்கு காட்டி வரி விலக்கு பெறுகின்றனர். வரி ஏய்ப்புகளும் நடக்கின்றன. நிறுவனங்கள் வரி பிடித்தம் செய்வதற்குப் பதில் தாங்களாகவே வரி கட்டும்படி தொழிலாளர்களை கேட்டுக் கொண்டால், இந்த 3 சதவீதம் என்பது இன்னும் சரிந்துவிடும். அதுதான் உண்மை.
வியாபாரத்தில் ஈடுபடும் நடுத்தர குடும்பத்தினர் பலர் லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்தாலும் நஷ்ட கணக்குதான் காட்டுகின்றனர். இதை சொன்னால், “அரசாங்கம் பணத்தை சரியாக பயன்படுத்துவதில்லை. அப்படி இருக்கும் போது எதற்கு வரி கட்ட வேண்டும்” என்று சொல்கின்றனர்.
இதே மனநிலைதான் வாக் காளர்களிடமும் உள்ளது. இது நமக்கு ஆச்சரியம் இல்லை. இதை நாம் சரியாக ஆய்வு செய்தால், அரசியலை ஊழலாக்கியது வாக் காளர்கள்தானே தவிர அரசியல் வாதிகள் அல்ல என்ற முடிவுக்கு வரமுடியும். இந்தியாவில் ஊழல், லஞ்சம் தவிர்த்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எந்த அரசியல் கட்சியாவது முயற்சி செய்தால், அந்தக் கட்சி அநேகமாக தோல்விதான் அடையும்.
இப்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் கூட லஞ்சம் வாங்க தொடங்கி விட்டனர். இதை அந்தக் கட்சியே ஒப்புக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், லஞ்சம் வாங்கிய பணத்தை சுவிட்சர்லாந்து வங்கியில் போட்டு வைக்க வேண்டும் என்பதல்ல, அடுத்த தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இது ஒரு மாதிரியான வட்டம் போன்றது. இந்தியா போன்ற நாட்டில்தான் இதுபோல் உருவாக முடியும்.