விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தேசிய தலைநகரின் எல்லைகளில் முகாமிட்டுள்ளனர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
கடந்த 39 நாட்களாக டெல்லி எல்லைகளில் முகாமிட்டிருக்கும் விவசாயிகள் நடுங்கும் குளிரிலும் தற்போதைய மழையிலும் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் திங்களன்று (ஜனவரி 4) நடைபெறும் பேச்சுவார்த்தையில் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வமான ஆதரவு ஆகிய இரண்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இன்று 7ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில் இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"மழை மற்றும் குளிர் இருந்தபோதிலும் சாலைகளில் உறுதியாக போராடிவரும் விவசாயிகளின் வைராக்கியத்திற்கு தலைவணங்குகிறேன். இன்றைய கூட்டத்தில் மத்திய அரசு, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளவும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும் வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.