மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | கோப்புப் படம் 
இந்தியா

விவசாய சகோதரர்கள் இன்று நீதி பெறுவார்கள்: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நம்பிக்கை

பிடிஐ

மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் விவசாய சகோதரர்கள் இன்று நீதி பெறுவார்கள் என்று பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக விவசாயிகளுடன் நடைபெற்ற அனைத்துக் கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசு ஏழாவது கட்டப் பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், மூத்த நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான தர்மேந்திரா, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இன்று நீதி கிடைக்க வேண்டும் என்று முழு மனதுடன் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தர்மேந்திரா டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துக் கருத்து தெரிவித்திருப்பது இது முதன்முறையல்ல. கடந்த மாதம், "எனது விவசாயி சகோதரர்களின் துன்பங்களைக் காண நான் மிகுந்த வேதனையடைகிறேன். அரசாங்கம் வேகமாக ஏதாவது செய்ய வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தர்மேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"இன்று எனது உழவர் சகோதரர்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் முழு மனதுடன் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொரு உன்னத ஆத்மாவிற்கும் உரிய தீர்வு கிடைக்கும்".

இவ்வாறு தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT