விவசாயிகள் சோர்வடையவார்கள், போராட்டம் தானாகவே முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால்,விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தவறான எண்ணம் விரைவில் தெளிவடையும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று நாள் முழுவதும் போராட்டம் நடத்த ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஜெய்ப்பூரில் உள்ள ஷாகீத் ஷம்ராக் பகுதியில் நடந்த போராட்டத்தி்ல் முதல்வர் அசோக் கெலாட்டுடன், மூத்த தலைவர் சச்சின் பைலட்டும் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:
டெல்லியின் எல்லைகளில் கடும் குளிரில் விவசாயிகளின் போராட்டம் 39 நாட்களைக் கடந்து விட்டது. ஆனால், மத்திய அரசு மிகவும் உணர்ச்சியற்றதாக இருக்கிறது. விவசாயிகள் சோர்வடைவார்கள், போராட்டம் தானாக முடிந்து விடும் என மத்திய அரசு நினைக்கிறது அதனால்தான் அரசு காலம் கடத்துகிறது.
ஆனால், விவசாயிகள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தவறான எண்ணம் விரைவில் தெளிவாகும். போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமே உட்கார்ந்து இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. நாட்டின் 6.5 லட்சம் கிராமங்களிலிருந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்
விவசாயிகளின் தலைவிதியை தீர்மானிக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை. மத்தியில் ஆளும் பாஸிஸ அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அவர்களுக்கு நாட்டை அழிக்க வேண்டும் என்பதே விருப்பம்.
நாட்டில் இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்காக பணியாற்றுகிறார்கள்.
காங்கிரஸ் தொண்டர் ஒவ்வொருவருக்கும் கட்சி சொல்வது என்னவென்றால், ஒவ்வொருவரும் விவசாயிக்கு ஆதரவாக நிற்க வேண்டும், தேவைப்பட்டால் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்
காங்கிரஸ் தனது தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரைத் தியாகம் செய்து நாட்டை 70 ஆண்டுகளாக ஒன்றாக வைத்து இருந்தது. . ஆனால் நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று பாஜக கேள்விகளை எழுப்புகிறது?. நாட்டின் ஒற்றுமையின் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு கெலாட் தெரிவித்தார்.