இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியையும், லடாக்கின் லே நகரையும் இணைக்கும் வகையில் 9.02 கி.மீ. நீளத்துக்கு கட்டமைக் கப்பட்ட அடல் குகைப் பாதை, கடந்த அக்டோபர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
ஆஸ்திரியா நாட்டு தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த குகைப் பாதையை பார் வையிடுவதற்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், மணாலியில் இருந்து அடல் குகைப் பாதையை கடந்து சென்றனர். பின்னர், மாலையில் அவர்கள் திரும்பி வருகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு தொடங்கியது.
இதனால் அவர்கள் வந்த கார்களும், பேருந்துகளும் சாலையில் கொட்டிக் கிடந்த பனியில் சிக்கிக் கொண்டன. பல மணி நேரம் போராடியும் அவர்களின் வாகனங்கள் மேற்கொண்டு முன்னேற முடிய வில்லை.
இதுகுறித்து தகவல் அறிந் ததும், குலு மாவட்ட எஸ்.பி. கவுரவ் சிங் உத்தரவின் பேரில், அவர்களை மீட்பதற்காக78 பேருந்துகள் மற்றும் 20-க்கும்மேற்பட்ட காவல் துறை வாகனங்களுடன் போலீஸார் அங்கு சென்றனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு மணாலிக்கு கொண்டு வந்தனர்.