நாட்டின் மிக முக்கிய விஷயமான கரோனா தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியலாக்குவது ஏற்க முடியாதது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.
ஆனால் பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3-வது கிளினிக்கல் பரிசோதனையை முடிக்காத போது எவ்வாறு இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனந்த் சர்மா, சசிதரூர், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இதுகுறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கு மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘இதுபோன்ற ஒரு முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது ஏற்க முடியாதது, அதிர்ச்சிகரமானது.
கரோனா தடுப்பூசிகளை அறிவியல் பூர்வமான வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளதை சசி தரூர், அகிலேஷ் யாதவ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது.’’ எனக் கூறியுள்ளார்.