மாயாவதி | கோப்புப் படம் 
இந்தியா

தடுப்பூசி வழங்குவதில் ஏழைகளுக்கு முன்னுரிமை; இலவசமாக வழங்கவேண்டும்: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

பிடிஐ

கோவிட் 19 தடுப்பூசி ஏழைகளுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சில மாநிலங்களில் கோவிட்-19 தடுப்பூசி விநியோகிப்பதற்கான ஒத்திகைப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் தயாராகியுள்ள கோவிட் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் உள்நாட்டில் உருவாக்கிய கோவாக்சின் ஆகியவற்றுக்கு நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில்இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து கோவிட் 19 தடுப்பூசி இம்மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

"நம் நாட்டிலேயே தயாரான சுதேசி கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி வரவேற்கத்தக்கது. இதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

மத்திய அரசிடம் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், அனைத்து சுகாதார ஊழியர்களுடனும், மிகவும் ஏழ்மைநிலையில் உள்ள மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதுதான் பொருத்தமானதாக இருக்கும்"

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT