பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் மருந்து நிறுவனமும் இந்தியாவில் 3-வது கிளினிக்கல் பரிசோதனையை முடிக்காத போது எவ்வாறு இரு நிறுவனங்களின் மருந்துகளையும் பயன்படுத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு தடுப்பு மருந்துகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கவலையும், கேள்வியும் எழுப்பியுள்ளார். ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
“ இதுவரை எந்தநாடும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்து, தரவுகளை ஆய்வு செய்து அனுமதி வழங்கவில்லை. ஆதலால், கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி கொடுக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
கரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்த இரு நிறுவனங்களும் தங்களின் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை நிறைவு செய்யவில்லை. அந்த நிறுவனங்களின் மருந்துகளின் பாதுகாப்பு அம்சம், திறன் ஆகியவையும் மறுஆய்வு செய்யப்படவில்லை. ஆனால், இவை இரண்டுமே கட்டாயமாகும்.
இரு மருந்துகளுக்கும் அனுமதி வழங்கிய விவகாரத்தில் கட்டாய நெறிமுறைகளையும், தேவைகளையும் உறுதிசெய்ய வலுவான காரணங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுவது அவசியம். ஏனென்றால், இந்த மருந்துகள் மூலம் முன்களப்பணியாளர்கள் ஏராளமானோருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் அறிக்கை குழப்பமாக இருக்கிறது. உலகளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் இறுதி விவரங்களை இந்திய அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும். கரோனா தடுப்பூசியின் நிரூபிக்கப்பட்ட செயல்திறன் குறித்த குழப்பத்தைத் தவிர்க்க பிரிட்டன், இந்திய அரசு கையொப்பமிட்ட ஒப்பந்தத்தையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
கரோனா தொற்றுநோயால் முடங்கியுள்ள நாட்டுக்கு, தடுப்பூசி வருகை குறித்த அறிவிப்பும், அதை தேசிய அளவில் பயன்படுத்தும் முடிவும் உண்மையில் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும், உறுதி செய்யும். உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இந்தியா மாறுவதற்கு நம்நாட்டின் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆய்வு நிறுவனங்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.
இரு கரோனா தடுப்பு மருந்துகளும் 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கும் போது, அவசரகாலத்துக்கு மட்டும் மருந்துகளை பயன்படுத்திக்கொள்ள அளி்த்த அனுமதி பல்வேறு உடல்நலம் சார்ந்த கவலையை ஏற்படுத்துகிறது”
இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும், கரோனா தடுப்பு மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி மீது கேள்வி எழுப்பியுள்ளார். ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தனுக்கு எழுப்பிய கேள்வியில் “ பாரத்பயோடெக் முதல்தர நிறுவனம். ஆனால், கோவாக்ஸின் மருந்துக்கான 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடந்து வரும் போது, சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் ஏன் இந்த மருந்துக்காக மாற்றப்பட்டன என்பது குழப்பமாக இருக்கிறது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.