இந்த தேசம் தற்சார்பு இந்தியா எனும் இலக்கை அடைய, மேலாண்மைத் துறையில் புத்தாக்கம், நேர்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகிய முக்கிய மந்திரங்களாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் ஐஐஎம் நிறுவனத்துக்கான நிரந்திர கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, அடிக்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மேலாண்மையில் கூட்டுசேர்தல், புத்தாக்கம், மாற்றத்துக்கான கருத்துகள் ஆகியவை மூலம் தற்சார்பு இந்தியா எனும் இலக்கை நாம் அடைய முடியும். மண்டலங்களுக்கு இடையிலான தொலைவை தொழில்நுட்பம் குறைத்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். உலகளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியாவும் டிஜிட்டல் முறையில் அனைவரும் ஒருவரோடு நெருக்கமாக தொடர்பில் இருத்தலுக்கான சீர்திருத்தங்களை விரைவாகக் கொண்டுவந்திருக்கிறது.
மனிதமேலாண்மையைப் போல், தொழில்நுட்ப மேலாண்மையும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா போதுமான அளவு திறனுடன் இருந்ததால்தான் கரோனா காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க முடிந்தது.
தற்சார்பு இந்தியா எனும்இலக்கை அடைவதற்கு புத்தாக்கம், நேர்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவை மேலாண்மையில் அவசியமான ஒன்று. இந்த மூன்றும்தான் தற்சார்பு இந்தியாவை அடைய உதவும் முக்கிய மந்திரங்கள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய இளம் தலைமுறையினர,், பின்தங்கிய பிரிவு மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
புதிய மேலாண்மை தொழில்நுட்பம், கருத்துகள் உதவியின் மூலம், உலக அளவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல முடியும். இன்று உருவாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக மாறுகின்றன. நாட்டின் எண்ணங்களுக்கு ஏற்ப நிறுவனங்களின் இளம் மேலாளர்கள் தங்கள் இலக்குகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.