கரோனா தொற்று குறித்த புதிய நிபந்தனைகளை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆந்திர மாநில தலைமை செயலாளர் நீலம் சன்ஹா வியாழக்கிழமை இரவு பிறப்பித்தார். புதிய உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது:
ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை, மத்திய அரசின்உத்தரவின்படி கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் சில நிபந்தனைகள் அறிவிக்கப் படுகின்றன. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க் கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தலைமையில் கண்டிப்பாக அமல்படுத்த வேண் டும். புதிய வகை கரோனா தொற்று நம் நாட்டுக்குள் வரதொடங்கி உள்ளது. இதனைதொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவது மிக அவசியம். இல்லையேல் இதனால் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.
புதிய வகை கரோனா தொற்றுஅதிகரித்தால் இரவு நேரத்தில் தேவைப்படும் இடங்களில் அந்தந்த ஊர்களில், மாவட்டங்களில் ஊரடங்கை மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்தலாம். ஆனால், புதிய நிபந்தனைகளின்படி பகல் நேரத்தில் லாக் டவுன் அறிவிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை. மேலும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்தை நிறுத்தவும் மாநிலங்களுக்கு உரிமை இல்லை. தனியார், அரசு நிறுவனங்களில் கண்டிப்பாக கரோனா நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை எக்காரணத்தை கொண்டும் நிறுத்த கூடாது.
ஒரே ஊரில் கரோனா தொற்றுபரவினால், அதனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, கரோனா நிபந்தனைகளை கடை பிடிக்க வேண்டும். வார சந்தை, மார்க்கெட் போன்ற இடங்களில் கரோனா நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை செயலாளர் கூறியுள்ளார்.