கரோனா வைரஸ் பரவல் தொடங்கியபோது மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 9 மாதங்களுக்குப்பின் கேரளாவில் இன்று திறக்கப்பட்டது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிக்குத் திரும்பினர்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், குறிப்பிட்ட இடைவெளியில் கைகளைக் கழுவ வேண்டும், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்பது பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டது. ஒரு மேஜைக்கு ஒரு மாணவர் எனும் வீதத்தில்தான் அமரவைக்கப்பட்டனர்.
ஆசிரியர்களும் சுழற்ச்சி அடிப்படையில்தான் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுவர வேண்டும் என்றும் ஒப்புதல் கடிதம் இல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.
அரசின் உத்தரவுப்படி மாணவர்களுக்கு நாள்முழுவதும் வகுப்புகள் நடைபெறாமல், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வகுப்புகள் நடந்தன. குறைவான அளவே மாணவர்கள் வந்திருந்தனர்.
10-ம் வகுப்பு மாணவி அகிலை கூறுகையில் “ நான் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியது வித்தியாசமாக இருந்தது. என்னுடைய நண்பர்களை நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்தேன்” எனத் தெரிவித்தார்
பார்வதி எனும் மாணவி கூறுகையில் “ ஆன்லைன் வகுப்புகள் எனக்கு சோர்வைத் தருகின்றன. பள்ளிக்கு நேரடியாக வந்து படிப்பதுதான் விருப்பம். கரோனா பரவல் இருந்தபோது, ஆன்லைன் வகுப்புகள் தேவை, அதன்பின் தேவையில்லை. என்னுடைய ஆசிரியர்கள், தோழிகளை நான் இழக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது உடல்வெப்பமானி வைத்து பரிசோதித்த பின்புதான் அனுமதிக்கப்பட்டனர்.
கேரளாவில் முதற்கட்டமாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இம்மாத 2-வது வாரத்தில் கல்லூரிகளுக்கு வகுப்புகளைத் தொடங்க கேரள அரசு ஆலோசித்து வருகிறது.
மருத்துவப்படிப்புகளுக்கு 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை விரைவில் தொடங்கவும் கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.