தங்களது விமான சேவையின் இணையதளங்களில் உள்ள சில சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனமான இண்டிகோ சேவை இணையதளங்களில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஹேக்கர்கள் அத்துமீறி நுழைந்துள்ளது குறித்து தற்போது கூறியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் இண்டிகோ விமானங்களின் இணையதளத்தின் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பொது வலைதளங்கள் மற்றும் தளங்களில் சில உள் ஆவணங்கள் ஹேக்கர்களால் பதிவேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாத ஆரம்ப நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
எனினும் இதில் பாதிக்கப்படாமல் உடனடியாகக் குறைந்த தாக்கத்துடன் மிகக் குறுகிய காலத்தில் கணினிகளை மீட்டெடுக்க இண்டிகோவால் முடிந்தது. இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். இந்த சம்பவம் விரிவாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து வல்லுநர்கள் மற்றும் சட்ட அமைப்புகளுடன் தொடர்ந்து பேசிவருகிறோம்.
இவ்வாறு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.