தலைநகர் டெல்லியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடும் குளிர் நிலவி மிகக்குறைந்த அளவாக 1.1 டிகிரி செல்சியஸ் அளவு பதிவானது. சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி டெல்லியில் மிகக்குறைந்தபட்சமாக 0.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. அதன்பின் தற்போது, 1.1. டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.
கடந்த ஆண்டில் மிகக்குறைந்தபட்சமாக 2.4 டிகிரி குளிர் டெல்லியல் நிலவியது என இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் டெல்லி மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ சப்தர்ஜங் முதல் பாலம் வரை கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் எங்கும் செல்ல முடியாமல் தவித்தனர். 50 மீட்டர் வரையில்கூட எந்த வாகனம் வருகிறது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை.
டெல்லி சப்தர்ஜங்கில் இன்று பதிவான நிலவரப்படி கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.1 டிகிரி குளிர் நிலவியது. வியாழக்கிழமை 3.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. கடந்த மாதத்தில் அதிகபட்சமாக 18-ம் தேதி 15.2 டிகிரி செல்சியஸ் பதிவானதே அதிகபட்சமாகும்.
மேற்குப் பகுதியிலிருந்து வரும் காற்றால் வரும் நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். ஜனவரி 2 முதல் 6-ம் தேதி வரை அதிகபட்சமாக 8 டிகிரிவரை அதிகரிக்கக்கூடும். ஜனவரி 3ம் தேதி முதல் 5-வரை டெல்லியல் லேசான மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. டெல்லியைப் பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு கடும் குளிருடன் காற்றுவீசும். ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவக்கூடும் ” எனத் தெரிவித்தார்.