பாகிஸ்தானிடமிருந்து சியாச்சின் பனி மலையை பாதுகாத்த கர்னல் புல் குமார் வியாழக்கிழமை காலமானார்; மறைந்த ராணுவ வீரருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1984 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இமயமலையின் இன்னொரு அங்கமாகத் திகழும் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிபடர்ந்த சியாச்சின் சிகரத்தை கைப்பற்ற முனைந்தது. எனினும் பாகிஸ்தான் நடவடிக்கைகளை முறியடித்து சியாச்சினையும் அதனைச் பனிப்பாறையைப் பகுதிகளையும் தனது போர்த்திறனால் காத்துநின்றவர் கர்னல் (ஓய்வு) நரேந்திர குமார்,
புகழ்பெற்ற மலையேறுபவராக விளங்கிய புல்குமார் நேற்று மாலை ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
"ஈடுசெய்ய முடியாத இழப்பு! மலையேறும் சிப்பாயாகத் திகழ்ந்த கர்னல் நரேந்திரர் 'புல்' குமார் (ஓய்வு பெற்றவர்) விதிவிலக்கான தைரியத்துடனும், விடாமுயற்சியுடனும் தேசத்திற்கு சேவை செய்தார். மலைகளுடனான அவரது சிறப்புமிக்க பிணைப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மலையேறும் சிப்பாய் கர்னல் நரேந்திரர் புல் குமார் இன்று காலமானார். அவருக்கு இந்திய ராணுவத்தின் ஆழ்ந்த இரங்கல்கள், தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் துணிச்சல் காரணமாக மலையேறும் சிபபாய் தலைமுறைகளைக் கடந்து நமக்கெல்லாம் ஊக்கமளிப்பார்'' என்று தெரிவித்துள்ளது.